கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!!
இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கேரளா மாநிலம் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவில் அண்மை ஆண்டுகளில் நிலச்சரிவு,வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமான வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப்பாங்கான அந்த வட்டாரத்தில் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் வசித்தனர்.
முண்டகை,சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்ததோடு, இருந்த இடத்திற்கான தடயங்களே இல்லாத அளவிற்கு காட்சி அளிக்கிறது.
பல உயிர்கள் மண்ணில் புதைந்துள்ளன. பலியானோர் எண்ணிக்கை 300 க்கு மேல் உயர்ந்து வருகிறது.
பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அங்கிருந்த பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது.
இடை விடாமல் மழை பெய்வதால் மீட்பு பணிகளில் சிக்கல்களும் ஏற்படுகிறது.
மேலும் சாலைகளும் சேற்றால் மூழ்கியுள்ளதால், வீடு எது? சாலை எது? என்பதை கூட அறிய முடியவில்லை என்று கூறினர்.அதுவே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல சவலாக அமைவதாக கூறப்படுகிறது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக இராணுவ வீரர்கள் 31 மணி நேரத்தில் தற்காலிக பாலத்தை அமைத்துள்ளனர்.
இதுவரை சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவால் உயிர் பிழைத்தவர்களை தேடும் முயற்சியில் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைவதாக கூறப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதி என்பதால் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. சேறுகள் அனைத்தையும் மூழ்கடித்துள்ளது.