தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம். தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும். தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும்.
தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், புதிய வேர் விரைவாக விட ஏதுவாகும். அரை வட்டக் குழி எடுத்து மரத்தைச் சுற்றி, எருக்களை 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, 1 கிலோ பூதகள்ளி, 1 கிலோ மீன்கழிவு, 1 கிலோ, உப்பு 1 கிலோ இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும். தேங்காய் மட்டையை, மரத்தைச் சுற்றில் மண்போர்வையாக இடுவதால் மண் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, களையை கட்டுப்படுத்தலாம்.
வேப்ப எண்ணெய் தெளிப்பதால் பூ உதிர்தலை குறைக்கலாம். குரும்பை உதிர்வதை தடுக்க சாதாரண உப்பை வளர் நுனிப்பகுதியில் மரத்திற்கு 2 கிலோ வீதம் மழைக்காலத்தில் இடவேண்டும். குரும்பை உதிர்வதை தடுக்க சாம்பலை இடவேண்டும். குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்த, பூப்பதற்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி எடுத்து அதில் கொழிஞ்சி மற்றும் எருக்களையை இடலாம். பூச்சி மற்றும் எறும்பு தொல்லையை தடுக்க, நடவுக்கு முன்பு வேப்பம் புண்ணாக்கைக் குழிகளில் இடவேண்டும். தண்ணீர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த மண் பாண்டங்களை அங்காங்கு தென்னை தோப்பிற்குள் சிறிய குழிகளில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்குப் பின்பு, அதிலிருந்து கிளம்பும் வாடையினால் காண்டாமிருக வண்டு கவரப்பட்டு பானையில் விழுந்து இறந்து விடும். வேப்பம் புண்ணாக்குச் சாற்றை வளர் நுனியிலும், அதற்கடுத்த ஓலையிலும் கொட்டுவதால் காண்டமிருக வண்டின் தாக்கதலைத் தடுக்கலாம் தண்டு கூண் வண்டின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த துளை ஏற்பட்ட பகுதியில் சுத்தம் செய்து சாதாரண உப்பை நிரப்பி பின்பு மூடிவிடவேண்டும். தென்னை நாற்று நடும்போது 1-2 கிலோ உப்பை குழிகளில் கொட்டினால், கரையானைக் கட்டுப்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் காக்கலாம்.
தென்னை நடவு செய்யும்போது கற்றாலை ‘மடல் ஒன்று குழிகளில் நட்டால் ஈரப்பதம் காக்கப்படுவதோடு கரையான் தாக்குதலையும் தடுக்கலாம். தென்னைந்தோப்பில், நீரை அதிகம் தேக்கினால் கரையான் எல்லாம் நீரோடு அழிந்துவிடும்.
தென்னை மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 2-3 அடி வரை சுண்ணாம்பு பூசினால் கரையான் தாக்குதல் கட்டுப்படும். கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 500 கிராம் சாதாரண உப்பை 5 லி தண்ணீரில் கலந்து தண்டின் ஊற்றினால் போதும். கோழிகளை தென்னந்தோப்பில் வளர்ப்பதால், அவை கரையானை தின்றுவிடும். தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பசுந்தாள் உரச்செடியாக கொழிஞ்சி அல்லது தக்கைப்பூண்டு செடியை வளர்த்து, மடக்கி உழலாம் அல்லது வேப்பம் புண்ணாக்கை நன்கு மட்கிய தொழு உரம் இட்டபின் இட்டு விடலாம். தென்னை தண்டு செவ்வொழுகல் (stem bleeding) யைக் கட்டுப்படுத்த ஒழுகல் பகுதியில் வாயை சுரண்டி சுத்தம் செய்து அதன்பின் சுண்ணாம்பு கரைசலை ஊற்றவேண்டும். மரத்தின் மீது எலி மற்றும் அணில் ஏறுவதைத் தடுக்க மரத்தின் அடியிலிருந்து 2-3 அடி உயரத்தில் சீமைக் கருவேல் கிளையைவோ முள் கம்பிவேலி சுற்றி கட்டினால் போதும். சிறிது நாட்டுக் சக்கரையை தேங்காய் எண்ணெயில் இட்டால் தூசுக்கள் எல்லாம் தனியாகப் பிரிந்து, எண்ணெய் தெளிவாக இருக்கும்.