ஜாக்கிரதை...!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்...!!
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்கிறோம். ஆனால் உடற்பயிற்சி செய்தாலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருதய நோய் என்றாலே வயதானவர்களுக்கு வரும் பிரச்சனை என்ற காலம் மாறி இப்பொழுது இளைய தலைமுறையினரும் இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு உணவு முறை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இருதய நோய் தொடர்பான சமீபத்திய ஆய்வானது,ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை எடுத்துக் கொண்டாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறது.
பாஸ்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் எஸிம் அஜுபோ இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 90,000 பேருக்கு ஆக்செலோமீட்டர்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் அமர்ந்திருக்கும் போதும் மற்ற பணிகள் மேற்கொள்ளும் போதும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடாது என்பது பரவலாக அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரே இடத்தில் அமரும்போது என்னென்ன பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்பதை துல்லியமாக அறிய முடியவில்லை.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில் தோராயமாக பத்து மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மனிதனின் உடலானது நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் வகையில் பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.
நின்றபடி வேலை செய்யும் போது இருதயமும் இருதய மண்டலமும் சிறப்பாக செயல்படுகிறது. அப்போது குடலும்,செரிமான மண்டலமும் கூட சீராக இருக்கிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது அது சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் இருதய நோய், நீரழிவு நோய்,கண் குறைபாடு செரிமான பிரச்சனை,நரம்பு தொடர்பான பிரச்சனை, தோள்பட்டை வலி,கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
இதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது உடலுக்கு ஓய்வு தர வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து சற்று நடக்க வேண்டும். கை கால்களுக்கு அவ்வபோது அசைவு தரும் வகையில் ஏதேனும் சில வேலைகளை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நம் உடலில் ஏற்படும் பின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர்.