மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!!

சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் சாலையில் உள்ள ஒரு கடையில் மீண்டும் மது வாங்கி குடித்ததாக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

ரேச்சல் இரவு 10 மணியளவில் யூனோசில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​தவறான திசையில் காரை திருப்பியதால் அது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் நுழைந்தது.

காரில் அமர்ந்து கொண்டே குடிவரவு அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, ​கார் திடீரென முன்னோக்கிச் சென்று சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.

ரேச்சல் கைது செய்யப்பட்டு சுவாசப் பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்தது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு $9,000 அபராதமும் ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.